tamilnadu

img

பிரசாந்த் கிஷோரை சரணடைந்தார் மம்தா!

கொல்கத்தா:
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில்,மேற்குவங்கத்தில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, 2019 தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக பெற்ற இந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது, திரிணாமூல் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் கூட்டமாக கூட்டமாக பாஜக-வில் ஐக்கியமாகி வருகின்றனர்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, எப்படியாவது, தன்னுடைய அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக துடியாய்த் துடித்துக் கொண்டி ருக்கிறார்.பாஜக-வை வீழ்த்துவதற்கு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தன்னுடன் கைகோர்க்க வேண்டும் என்றெல்லாம் ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.ஆனால், “பாஜகவுக்கு எதிராக போராடும் தார்மீக உரிமையை மம்தா பானர்ஜி இழந்து விட்டார். அவரால் மற்றொரு பாசிச இயக்கத்தை எதிர்க்க முடியாது” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுதியுடன் கூறிவிட்டது.காங்கிரஸ் கட்சியும், “மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-சின் எழுச்சிக்கு மம்தா பானர்ஜி மட்டுமே காரணம்” என்று குற்றம் சாட்டியதுடன், “மம்தா அப்பட்டமான சிறு பான்மை ஆதரவு பிரச்சாரத்தை மேற் கொள்ளாமல் இருந்திருந்தால், பாஜகமேற்கு வங்கத்தில் காலூன்றி இருக்காது” என்றும் கடுமையாக பதிலளித்தது.இந்நிலையிலேயே, கார்ப்பரேட் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை, மம்தா பானர்ஜி சரணடைந்துளளார். அண்மையில் கிஷோரை மேற்குவங்கத்திற்கு அழைத்து மம்தா ஆலோசனை நடத்தினார். 

நரேந்திர மோடி, நிதிஷ் குமார், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான சூட்சமங்களை வகுத்துக் கொடுத்தவர்தான் பிரசாந்த் கிஷோர். அந்த வகையில், மம்தாவுக்கும் அவர் முதற்கட்டமாக சிலதிட்டங்களை வகுத்துக் கொடுத்தாக கூறப்படுகிறது.இந்த பின்னணியில்தான், திரிணா மூல் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்திய மம்தா பானர்ஜி, அவர்களுக்கு 6 முக்கியமான உபதேச ங்களைச் செய்துள்ளார். இதனை மம்தாவின் “கார்ப்பரேட் மந்திரங்கள்” என்று ஊடகங்கள் வர்ணித்துள்ளன.

1. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்தல் சிந்தனையில் இருந்துவெளியே வர வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது. இப்போது பொது பிரதிநிதியாக மாற வேண்டும். உங்கள் நேரத்தை சட்டசபையில் 7 நாட்களுக்கு மேல் (?) கொடுங்கள்.
2. எந்தவொரு விவகாரத்திலும் சிக்காதீர்கள். அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
3. நிர்வாகம் மற்றும் காவல்துறை யை நம்ப வேண்டாம். உங்களுக்கான அரசியலை நீங்களே உருவாக்குங்கள். சச்சரவுகளைத் தவிர்த்து விடுங்கள். அதில் இருந்து வெளியே வாருங்கள். உங்கள் நடத்தை சரியாக வைத்திருங்கள்.
4. நீங்கள் ஏதாவது தவறு செய்தால் மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள். அவர்களுடன் உட்கார்ந்து பேசுங்கள்.
5. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி யிலும் 4 பேர் கொண்ட குழுவை உருவாக்குங்கள். அந்த குழுவில் ஒரு சமூக ஊடக உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினரின் பிரதிநிதி மற்றும் ஒரு வாக்குசாவடி மேம்பாட்டு மேலாளரை நியமியுங்கள்.
6. தவறான அறிக்கைகளையோ கருத்துகளையோ யாரும் சொல்லக் கூடாது. சட்டமன்ற உறுப்பினர்கள் யாராவது வெளிநாடு பயணம் செல்ல வேண்டும் என்றால், முதலில் கட்சியின் மேலிடத்திக்கு தெரிவிக்க வேண்டும்.

- இவைதான் அந்த 6 மந்திரங்கள் ஆகும். 
கார்ப்பரேட் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்தான், இவற்றை எழுதிக் கொடுத்திருப்பதாகவும், அதனை மம்தா தனது வாயால் உபதேசித் திருக்கிறார் என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன.

;